Home / தமிழ் / சிந்திப்போமா / அம்மாவும் அப்பாவும்….

அம்மாவும் அப்பாவும்….

       எழுத்து – ஜெகன் ஆண்டுரூஸ்

AmmaAppa1

என்னையும், மூன்று மூத்த சகோதரிகளையும் உருவாக்கிய எனது அம்மா அப்பாவுக்கு இன்று திருமணம் முடிந்து 50 வருடங்கள்…

1930 வருட கால கட்டத்தில், அப்பாவின் அப்பா (ஆன்ட்ரூஸ் தாத்தா) எனது கிராமம் புத்தன்துறை பள்ளியில் ஆசிரியர் , அப்பாவின் அம்மா (நட்சத்திரம் ஆச்சி) வீட்டை வழி நடித்தி வந்தார்… அப்பா கருணாகரன் வீட்டில் கடைசியாக பிறந்தவர், முதலாவதாக பிறந்த ஞானம் அக்காவுக்கு (எனது அத்தை) திருமணம் ஆகவில்லை, நான்கு சகோதர்கள் (எனது பெரியப்பாமார்கள்) திருமணம் ஆகி வெவ்வேறு வீடுகளில் தனிக்குடித்தனம் சென்று விட்டனர்…..

அம்மாவும் வீட்டில் கடைசிப்பிள்ளை….. மிகவும் செல்லம், அம்மாவின் அப்பா (சூசை மரியான் தாத்தா) கடல் கடந்து சிங்கப்பூரில் வியாபாரம் செய்து திரும்பியதால் ,அம்மாவிற்கு “ஞானசமுத்திரம்” (ஞானத்தின் கடல்) என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்…. அம்மாவின் அம்மா ( ஜோசப்பின் ஆச்சி) மிகவும் பொறுமைசாலி , அமைதியின் சிகரம்… அம்மாவிற்கு மூன்று சகோதரர்கள் , ஒரு அக்கா….. செலீன் பெரியம்மா என்னிடம் மிகவும் பாசம் , சிங்கப்பூர் ஒரு விதத்தில் அனைவரையும் மகிழ்ச்சியாக இருக்க வைத்தது…

1960களில் அப்பா பள்ளி படிப்பை முடித்து விட்டு வேலை தேடி கோயம்புத்தூர் சென்றுள்ளார்கள், தேங்காய் விற்கும் தொழில் சந்தையில், தினமும் இரண்டரை ருபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்….அப்பாவை பற்றி வீட்டில் யாரோ பற்ற வைக்க வீடு திரும்பி இருக்கிறார்….அடுத்த பயணம் ஆந்திரா , பேட்டா shoe நிறுவனத்தில் வேலை , பல காரணங்களால் தொடர முடியவில்லை…..மீண்டும் வீடு திரும்பிய அப்பா ஆசிரியர் படிப்பை தொடர்ந்துள்ளார்கள்….படிப்பை முடித்து 1962யில் திரு.தாமஸ் ஆசிரியர் உதவியுடன் இரமந்துரையில் 84 ரூபாய்க்கு பள்ளி ஆசிரியர் பணியை தொடர்ந்திருகிறார்….பிறகு புரவூர் என்ற கிராம பள்ளியில் அரசாங்க பணி, தொடர்ந்து ஈத்தா மொழிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இருகின்றார், அப்பா 1996ஆம் ஆண்டு உத்தியோக ஓய்வு பெற்ற போது சம்பளம் ருபாய் 6500….

(சுவாரசியமான விஷயம், எனது முதல் / இரண்டாவது வேலையும் கோயம்புத்தூர் மற்றும் ஆந்திராவில்….. வேலை தேடி சென்னை சென்ற போது என்னை அவர் வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர் திரு.தாமஸ் ஆசிரயர் மகனும் எனது நண்பனுமான அருள் எழிலன்.)

1965, ஜூன் 28 , அப்பா அம்மாவிற்கு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது …..இருவர் வீடும் நடுத்தர வர்க்கம் அப்போது….. குடும்ப வாழ்க்கை எங்களது தோட்ட வீட்டில் தாத்தா/ ஆச்சி மற்றும் ஞானம் அத்தையுடன் கூட்டு குடும்பமாக ஆரம்பம்….. முதலாவது மகள் (லடீஸ் அக்கா ) பிறந்தது மார்ச் 7, 1968 , இரண்டவது மகள் (வளர்மதி அக்கா) பிறந்தது அக்டோபர் 17, 1969 , மூன்றாவது மகள் (சோபனா அக்கா) பிறந்தது ஜூலை 23, 1972 . நான் பிறந்தது ஜூன் 30, 1976, அப்போது எனது தாத்தா இறந்து ஒரு வருடம், ஆச்சி உடல் சரி இல்லாமல் கட்டிலில் படுக்கை, எனக்கு எனது தாத்தாவின் பெயர் சூட்டப் பட்டது…… நாங்கள் நால்வரும் அத்தையின் கண்காணிப்புடன் அம்மா, அப்பாவின் அரவணைப்பில் வளர்க்கப்பட்டோம்…… படுக்கையில் இருந்த ஆச்சியை அம்மா, அப்பா, அத்தை மிகவும் பாசத்துடன் அவர் இறக்கும் வரை கவனித்து கொண்டார்கள்….

என்ன ஒரு உழைப்பு! அதிகாலையில் அப்பா வீட்டு தோட்டத்தில் பணி , அம்மா சமையல் வேலை….சிறுக சிறுக சேமிர்த்தார்கள் , எதையும் வீணடிக்கவில்லை….. கிடைத்த காசை எல்லாம் , பிள்ளைகளை கரை சேர்க்க பொன்னாக வாங்கி வைத்தார்கள்….. அதே சமயத்தில் எங்கள் நான்கு பேரையும் நல்ல முறையில் மேற்படிப்பு படிக்க வைத்தார்கள்…. பொன்னை விட வைடூரியமாக நல்ல மருமக்கள் கிடைத்தார்கள் ….எனது அம்மாவின் அண்ணன் உதவியும் , குடும்ப நிர்வாகத்தை நடத்த மிகவும் உதவியது…..

அம்மா அப்பாவின் விருந்தோம்பல் என்னை மெய் சிலிர்க்க வைக்கும், தோட்ட வீட்டில் குடும்பத்தார் அடிக்கடி கூடுவது உண்டு, அம்மாவும், மணி பெரியம்மாவும் அனைவருக்கும் சமைத்து பரிமாறுவார்கள், இன்றும் என் மனதில் நீங்காத மகிழ்ச்சி…. அம்மா நன்றாக சமைப்பார்கள் , சமையலறையில் அமர்ந்து சுடச்சுட தோசை, புட்டு மீன்கறி, அந்த ருசியே தனிதான்…..

அம்மா ,அப்பா சண்டை போட்டு பார்த்தது இல்லை ……என்ன அம்மாவுக்கு ஒரு வருத்தம் , அப்பா வெளியில் எங்கும் கூட்டி போவது இல்லை , படம் பார்க்க போவதில்லை என்று……அப்பாவிற்கு பிடிப்பது இல்லையோ, அல்லது பணத்தை வீணடிக்க மனம் இல்லையோ தெரியவில்லை…. இதுவரை இருவரும் சேர்ந்து திரைப்படம் பார்க்க சென்றது இல்லை ….ஆனால் அவர்கள் சிறு வயதிலேயே அண்ணன் உதவியுடன் பல இடங்களை சுற்றி பார்த்து விட்டார்கள்…..

தெய்வ பக்தியில் வளர்த்தார்கள்….. காலை தினமும் கோயில் வழிபாடு, இரவு தவறாமல் குடும்ப செபம், செபத்தை தொடர்ந்து குடும்பமாக உணவு உண்பது, தூங்கும் முன்பு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது , இன்றும் அம்மா தவறாமல் கோயில் சென்று வருவார்கள்…. இருப்பினும் எங்களை ஊர் ஊராக கோயில் திருவிழாவிற்கு வேடிக்கை பார்க்க அழைத்து சென்றது கிடையாது….

அம்மாவுக்கு நாய் என்றால் ரொம்ப இஷ்டம் , வீட்டில் ஒரு முறை ஆசையாக வளர்த்த அல்சேஷன் (டைகர்) தவறுதலாக தண்ணீரில் விழுந்து இறந்த போது நானும் அம்மாவும் தேம்பி தேம்பி அழுதோம்….

அப்பா மிகவும் கண்டிப்பானவர், அதே சமயம் அரவணைக்கவும் செய்வார்…..மிகவும் பயப்படுவேன், மூன்று முறைதான் அடித்திருக்கிறார், மரண அடி…..ஒரு முறை எங்களது வீட்டில் பணி புரிந்த சூசையம்மக்கா கதறலால் தப்பினேன், சமுத்திரத்திற்கு ஆண் பிள்ளை வேண்டும் என வேண்டியர்களில் இவரும் ஒருவர்…. அம்மாவும் மிகவும் கண்டிப்பானவர் , இரவு 7 மணிக்கு முன்பு வீடு வந்து சேர வேண்டும் , இப்பொழுது ஊருக்கு சென்றாலும் அதட்டுவார்கள்…… இந்த கண்டிப்பிலும் எனது இளமை பருவம் புத்தன்துறையில் நண்பர்களுடன் படு ஜாலியாக அதே சமயம் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருந்தது……

அம்மாவை எல்லோருக்கும் பிடிக்கும், அப்பா கொஞ்சம் நினைத்ததை அடுத்தவர் முன்பு வெட்டன பேசுவதால் சில பேருக்கு பிடிக்காது, ஆனால் அவர் பல முறை சரியாகத்தான் பேசி இருக்கிறார் என நான் உணர்கிறேன், இருந்தாலும் அவர் பேசியது சில பேரை காயப் படுத்தி இருக்கலாம்………..

அப்பா அம்மா குடும்பத்தார் அனைவருடன் மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள்…. எங்கள் குடும்ப திருமணங்கள் பல தோட்ட வீட்டில்தான் நடைபெற்றது , இருவரும் முன் நின்று செய்வார்கள்….. ஆச்சி இறக்கும் வரை , பெரியப்பமார் குடும்பத்தினர் ஒவ்வொரு ஞாயிறும் நாகர்கோயிலில் இருந்து தோட்ட வீடு வருவதுண்டு…. சுகந்தம் பெரியப்பா ஒவ்வொரு நாள் மாலையும் வீடு தேடி வருவார்கள் …… அம்மா , செலின் மற்றும் மணி பெரியம்மாவை தினமும் சந்தித்து கொள்வார்கள்….. அண்ணன்மார்களிடமும் அம்மாவுக்கு அளவு கடந்த பாசம், அவர்கள் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து வந்து விட்டால் அம்மாவை கையில் பிடிக்க முடியாது…. அம்மாவுக்கு அவர்கள் வின்சி மைனியை ரொம்பப் பிடிக்கும்…….அப்பாவின் சகோதரர் ஜெலஸ்டீன் பெரியப்பா இறப்பு மற்றும் எனது அண்ணன்மார்களின் இறப்பின் போது அப்பாவின் கதறல் சத்தம் கேட்டேன், ஆம் சிறு வயது பிரேம் அண்ணாவின் மரணம் எங்கள் குடும்பத்தை உலுக்கியது, பிரேம் அண்ணா ஏனோ என் மனதில் எனக்கு பிடித்த தெய்வமாகவே ஆகி விட்டார்……..அப்பாவை சிலர் வெறுத்தார்கள், அவர்களையும் நேசிக்கிறார் என உணர்கிறேன்.

இவை அனைத்தையும் விட என்னை சந்தோசப்பட வைப்பது , அப்பாவின் சமுதாயப்பணி….அத்தனை குடும்ப பொறுப்பிலும் காலையில் எழுந்து ஊருக்கு தண்ணீர் விட ஓடுவார், மழை வந்து ரோட்டில் தண்ணீர் தேங்கி விட்டதா மண்வெட்டி எடுத்து கொண்டு ஓடுவார், மின்சார பிரச்சனை சைக்கிள் எடுத்து கொண்டு லைன்மேன் தேடி ஓடுவார் , தோப்பு பிரச்சனை, காவல்காரர் கண்காணிப்பாளராக செயல்பட்டார், ஊரின் அனைத்து நிர்வாகத்திலும் முடிந்த வரை திறம்பட செயல் புரிந்தார் , புரிந்து கொண்டு இருக்கிறார் …….. அப்பா, சுயநலம் அற்ற எளிமையான மனிதர் , எதையும் ஆதாயம் தேடி செய்து பார்த்தது இல்லை…. இந்த முறை ஊர் சென்ற பொது அப்பாவிடம் சொன்னேன் ” அப்பா ஏம்பா பள்ளி பக்கம் ரோடு ரொம்ப மோசமா இருக்கு ? ” அப்பா ஏனோ தெரியவில்லை என்னிடம் கோபப்பட்டார் , நான் அமைதி ஆனேன் ….அம்மா சொன்னங்க , அப்பா எதாவது சொல்லுவாங்க கண்டுக்காதே என்று , அப்பாவின் பேச்சு என் மனதை பெரிதும் பாதிக்கவில்லை , ஆனால் அந்த ரோடு பள்ளம் மட்டும் என் மனதை உறுத்தி கொண்டே இருந்தது……..இரண்டு நாட்கள் பிறகு நான் அந்த ரோடு வழியாக நண்பன் எட்மண்ட் உடன் காரில் சென்று கொண்டு இருந்தேன் , அப்பா கன்னியர் மடத்தை பழுது பார்த்த கல் கொண்டு ரோடை ஆள் வைத்து செப்பனிட்டு கொண்டு இருந்தார் ….அப்பாவிடம் தோற்றுப் போனேன், அவர் அந்த இடத்தில் என் கண் முன் உயர்ந்து நின்றார்…..” பெற்றோர்களிடம் பிள்ளைகள் தோற்பதும் , பிள்ளைகளிடம் பெற்றோர் தோற்பதும் ஒரு நல்ல குடும்ப சூழலை உருவாக்கும் என நினைகிறேன்”….அப்பாவின் சமுதாய பணிக்கு அம்மாவும் பெருமளவும் துணை நின்றார் என்பது குறிபிடத்தக்கது…. அம்மா அப்பா அவர்களால் முடிந்த வரை பிறர்க்கு பொருளாதார உதவியும் செய்து பார்திருக்கிறேன்….

சிறு வயதில் அப்பா அம்மாவின் பேரை காப்பற்ற பல முறை போராடி தோற்று இருக்கிறேன், பல நேரங்களில் அப்பாவின் பெயரால் சாதித்தும் இருக்கிறேன்…. சிறு வயதில் “வேலு நாயக்கரின் மகன்” போன்ற எண்ணம் என் மனதிற்குள், ஆனால் வெளியே காட்டி கொள்ள மாட்டேன்… உண்மையில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன்…. அவர்கள் போல என்னால் வாழ்வது கடினம்தான், நண்பர்களை விட என்னை பற்றி எனது மனைவிக்கு அதிகம் தெரியும்…..

எனது பெற்றோர் தெய்வ பிறவிகள் என்று சொல்லவில்லை, ஏனைய நல்ல பெற்றோர் போன்று அவர்களும் தங்கள் கடமையை திறன்பட செய்கின்றார்கள்….. அவர்களின் 50 வருடபொன்விழா கொண்டாடப்பட வேண்டியது, கொண்டாடினோம், குடும்பத்தார் நண்பர்கள் புடை சூழ, மே 30, 2015 அன்று தோட்ட வீட்டில் ….. உறவுகளை பல நாட்களக்கு பிறகு பார்த்ததில் மிகுந்த சந்தோசம், கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி……அப்பா அம்மாவின் 50 வருடகால திருமண பந்தத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது அன்பான நன்றிகள்…

ரொம்ப அதிகமாக பேசி விட்டேனோ, நான் இதுவரை எழுதி பழக்கமில்லை , ஆனால் முதன்முறையாக இதை எழுதும் போது என்னால் நிறுத்த முடியவில்லை, சில தருணங்களில் கண்ணீரையும் தான்……..தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் …

User Rating: Be the first one !

One comment

  1. முதல் தடவை வாசிக்கிறேன் இனியும் வாசிப்பேன்.நன்றி