போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது..
வரம் தேடி..
விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள்
உன் மனதின் தொடர்பு எல்லையைத் தொடாமல்
விழலுக்கிறைத்த நீராய் வீணாகிட
அகத்தமிழ் கூறும் அழகிய வார்த்தைகள் கோர்த்து
கரிய மையில் கூட காதல் நிரப்பி நான் வரைந்த
நெஞ்சின் நேசக் கடிதம் உன் கரம் சேர்த்திட,
நெடுநேரம் மரமற்ற தெருமுனையில் தவிப்புடன் நானிருக்க,
சிறுதூரத்தில் தரையிறங்கிய நிலவாய் படியிறங்கியபடி நீ..
வெப்ப மண்டலத்தில் குளிர் காற்றாய் நீ நெருங்க
பதட்டத்தின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்னுள்..
பொருட்படுத்தா வர்தா புயலென நீ விருட்டெனக் கடந்தாலும்
சேதமான நெஞ்சில் ஏனோ வசந்தத்தின் சாரல்!!
அடங்கா இதயக் கலவரத்தை அழுத்த நடையில் அடக்கி
அச்சம் மறைத்து ஆவல் குழைத்து ஆசை மடலை
பொறுப்பாய் உனக்களிக்க, வெறுப்பாய் நீ உமிழ்ந்த
மறுப்பில் என் நெஞ்சில் தொகுப்பாய் கோடி இடிகள்..
குளிர் தண்ணிலவு நீ, அனல் தகிக்கும் ஆதவனாகி,
தளிர்ச் செடியாய் துளிர்த்திடும் என் இதய உணர்வுகள்
உன் ஒருத்திக்கு மட்டுமேயென உணர்ந்தும் உணராமல்
பொசுக்கும் அமில வார்த்தைகள் வீசி அதை நசுக்க முயலாதே..
காகித எழுத்துக்களை நீ காற்றில் பறக்க விட்டாலும்
உன் கடைக்கண் பார்வையில் கனிந்த என் கற்பாறை மனதில்
காதல் வட்டெழுத்தாய் காலங்கடந்தும் நிலைத்திருப்பவள்
கனல் பெண்ணே நீ மட்டுமே..
பருவத் தவறின் பிதற்றலிதுவென நீ புறக்கணித்தால்
மறந்திடுவேன், உனை மறுத்து வேறு மலர் நாடித்
தாவிடுவேன் என்ற உன் கணிப்பைப் பொய்யாக்கி
பொறுத்திருப்பேன், என் தகுதி பெருக்கித் திரும்பிடுவேன்
கோபத் திரையின் பின் இலைமறை காயாக ஒளிந்திருக்கும்
உன் கனியும் காதல், கண்ணில் ஒளிரும் வரை
காத்திருப்பேன்.. என்றும் எதிர் பார்த்திருப்பேன்..
பின்குறிப்பாய் ஒற்றை வேண்டுகோள்
நரை விழுமுன் திரை விலக்கி முறையோடு
உன் கைத்தலம் பற்றும் வரம் கொடு தோழி.
– சுஜனா