தமிழ் அன்னை

தமிழ் அன்னை

ஆண்டு பற்பல கடந்த உன்
அகவை பல்லாயிரமெனினும்
பேரிளம்பெண் அல்லவே நீ!
எழிலும், வளமும், நலமும் என்றும் குன்றா
சீரிளம் கன்னியன்றோ நீ!

அறம் சார் நல்லவையும்
மறம் சேர் வல்லவையும்
அன்பும் பண்பும் சூழ்ந்திட
அகமும், புறமும் உயர்ந்திட அறிவுறுத்தி
வையத்துக்கே நெறிமுறை கற்பித்த நங்கை நல்லாள் நீ!

தொன்று தொட்டு வாழும் செம்மொழி நீ!
இலக்கணம் விதித்ததோ தொல்காப்பியம்..
நற்றமிழ் வார்த்தை கோர்த்து
நம்மறிஞர் நல்கிய நன்னெறி நூல் சேர்த்து
என்றும் தமிழர் எம் வாழ்வியலுக்கே இலக்கணம் வகுத்தவள் நீ!

உலக உயிரனைத்தும் தம் உறவெனவே
உயரிய உள்ளம் கொண்டு
வந்தாரை வாழவைத்து, மனமார விருந்தோம்பி
தீமையதை மறந்து, நன்மையே நினைத்திடும்
தமிழ்மணம் மாறா தனித்துவ தத்துவம் தந்தவள் நீ!

தற்கால மாயையில் கட்டுண்டு
தமிழர் யாம் சற்றே தடம்புரண்டாலும்
எம் உயிரில் மெய்யாய் உறைந்த அன்னைத் தமிழே
உதிரத்தில் கலந்த உன் உணர்வால்
எக்காலமும் எங்கள் வாழ்வும், வழியும் உன்னோடு மட்டுமே!
– சுஜனா

“தமிழ் அன்னை“ என்ற தலைப்பில், ‘மரபுப்படல்கள்’ என்ற இணையதளத்தில் வெளியான எனது புதுக் கவிதை.

தமிழ் ஆர்வம் கொண்டவர்களுக்கு, மரபுக்கவிதைகள் எழுதும் முறைகளைக் கற்று தருவதற்காகப் புதிதாய் உருவாக்கப்பட்டுள்ளத் தளம் இது. தமிழில் மரபுப் பாடல்கள் எழுத விரும்புபவர்கள், விருத்தம், அகவல் பா, வெண்பா ஆகிய மரபு முறையில் பாடல்களை எழுதி அனுப்பினால் இந்தத் தளத்தில் பதிவிடுவார்கள். முழுக்க முழுக்க தமிழ் ஆர்வலர்களால் (முனைவர் ந. அருள்மொழி, தமிழ்நாடு
வைதேகி ஹெர்பர்ட், ஹவாயீ, அமெரிக்கா) நடத்தப்படும் இத்தளத்தை பயன்படுத்த விருப்பம் கொண்டவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை அழுத்தவும் :
https://marapuppaadalkal.com

உலகத் தாய்மொழி தின வாழ்த்துக்கள் (21.02.2018)

0

User Rating: 0.49 ( 1 votes)

About admin

Check Also

வரம் தேடி..

போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் …