Home / தமிழ் / சிறுகதைகள் / “திருப்புமுனை” – by SUJANA

“திருப்புமுனை” – by SUJANA

Dear Friends,

I am delighted to share my first Tamil  short story which won the first prize in a Short Story competition conducted by an online forum.

அன்பு தோழமைகளே,

உங்கள் அனைவருடனும் எனது முதல் தமிழ் சிறுகதையை பகிர வந்திருக்கேறேன்.

இக்கதை இணைய தளம் ஒன்றில் “திருப்புமுனை” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டு முதற்பரிசை பெற்றது என்பதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

உங்கள் மேலான கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

 


திருப்புமுனை 

 

“சொன்னா கேளு மாமா….இந்த பொழப்பு நமக்கு வேணாம்…கஞ்சியோ கூழோ முன்ன மாதிரி லேத்து பட்டறைக்கே போ..அரக்காசு கிடைச்சாலும் அது பாவ காசா இருக்ககூடாது”, லட்சுமி கணவன் மணியிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.

“அட போ புள்ள…இந்த தொழிலுல என்ன கொறைய கண்டிபிடிச்சவ? நாலு குடும்பத்துல அடுப்பெரியறது பாவ காரியமா?”

“ஆங்…அடுப்பு எப்படி எரியுது? காசுக்கு ஆசைப்பட்டு சின்ன புள்ளைகள அடிமாடு போல விக்க தரகு வேலை பாக்குறீயே..அது ஒசத்தியான புண்ணியமா? ”

“உன்னோட பெரிய ரோதனையா போச்சு…..நா என்ன கடத்தியா விக்குறேன்…..அதுங்கள பெத்ததுங்களே சம்மதிச்சு அனுப்புதுங்க….இருக்க இடமும், வேளைக்கு சாப்பாடும், கூலியா காசும் குடுக்கறதுனா சும்மாவா? நல்ல வழிக்கு உதவுறேன்..அம்புட்டுதேன்…..பெருசா பேச வந்துட்டா…சோத்த போடுறியா?”

“சொல்றத கேளு மாமா.. எனக்கு மனசே ஒப்பல…அங்கெல்லாம் ரொம்ப கொடுமபடுத்துறாகளாமே…. ” என்று குழைவாக கெஞ்சியபடி உணவு பரிமாறினாள்.

” அட என்ன நீ நொய்யி, நொய்யினு மனுசன போட்டு புண்ணாக்குற…. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..பொராமக்கார பயலுவ நாலையும் கிளப்பிவிடுவானுக…..” எரிச்சலுடன் ஒரு பிடி சோற்றை வாயில் வைக்க போனவன், அப்படியே நிறுத்தி, “இந்த நேரத்துல இதையெல்லாம் யோசிச்சு விசனப்படாத புள்ள…. நீ சாப்பிட்டியா? உள்ள இருக்குற குட்டி ராசா என்ன சொல்றாரு?”, என்று மூன்று வருடங்களுக்கு பின் உண்டாகியிருந்த மனைவியை பார்த்து ஆதுரத்துடன் விசாரித்தான்.

மணியின் இந்த அன்புதான் லட்சுமியை கட்டிப்போட்டது… குடும்ப பகையையும் மீறி, அவனையே கைபற்றியதற்கு காரணமும் இதே காதல் தான்.

எதிலும் மனைவி பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் கட்டுபடுபவன், தொழில் விஷயத்தில் மட்டும் அசைந்து கொடுக்கவே இல்லை.

காரணி: ‘பணம்’!

தன்னை உதாசீனப்படுத்திய லட்சுமியின் குடும்பத்தினர் முன்பு பணக்காரனாக வேண்டுமென்ற வெறி அவனுக்குள் பேயாட்டம் போட்டுக் ஆட்டுவித்தது.

உசிலம்பட்டியில் லேத்து வேலை செய்து கொண்டிருந்த மணியின் சுக்கிர திசையோ! சனி திசையோ! ஒன்றரை வருடங்களுக்கு முன், கோவை அருகே பஞ்சாலையில் பணிபுரிந்த பாண்டியன மூலம் அங்கு செயல்பட்ட ” சுமங்கலி திட்டம் ” பற்றி தெரிய வந்தது.

பழைய நண்பனான பாண்டியன், மணியின் கையில் ஒரு கற்றை துண்டறிக்கைககளைத் திணித்து, ” மாப்ள…இத படிச்சு பாரு….இப்படியெல்லாம் எங்க வசதி செஞ்சு தராய்ங்க! சொளையா மாசம் 3000 ரூவா சம்பளம், வேளைக்கு சாப்பாடு, உறங்க மெத்தை தலையணை, ரூமு, பண்டிக பருவத்துக்கு லீவு, பொழுதுபோக்கு, இதெல்லாம் பத்தாதுன்னு மூணு வருஷத்துக்கப்புறம் 45000 ரூவா ரொக்கம் வேற…பொட்ட புள்ளைகளுக்கு கல்யாண செலவுக்கு சரியா போயிடும்ல…இதுக்கு ஆள் பிடிச்சு கொடுக்கறவங்களுக்கு கமிசனா லம்பா ஒரு தொக குடுக்கராணுவ..நம்ம பக்கத்து புள்ளைகளுக்கு ஏதோ நம்மால ஆன உபகாரமா போகும்..புண்ணியத்துக்கு புண்ணியமும் ஆச்சு…காசுக்கு காசுமாச்சு…”

“ஒரு கண்டிசன் மாப்ள…பண்ணிரெண்டுல இருந்து பதினெழு வயசுக்கு கொறச்சலான பொட்ட புள்ளைகளா பாரு…சரியா?”

சிந்தனைக்கு இடமேயளிக்காமல், சடாரென்று காரியத்தில் இறங்கிவிட்டான் மணி.

ஆளை அசத்தும் பேச்சு சாமார்த்தியத்தை மூலதனமாக்கி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பஞ்சத்தில் நசிந்து போன பெற்றோரை பேசியே கவிழ்த்தான்..

வரதட்சணை பேய்க்கு பயந்து பிள்ளைகளுக்கு திருமணமே ஆகாதோ என்று பீதியில் காலம் தள்ளிக்கொண்டிருந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களும், பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்ட போதை ராஜாக்களும், சந்தோஷத்துடன் சம்மதிக்க, பருவகாற்றில் மலர வேண்டிய மொட்டுக்கள் சூறைக்காற்றை சந்திக்க வேலைக்கு அனுப்பப்பட்டன.

இடைத்தரகில் பணம் கொழிக்கவே, அதையே தன் பிரதான தொழிலாக மாற்றிக் கொண்டான்.

நாட்பட, மில் திட்டத்தின் ஜிகினா பூச்சுகள் உதிர்ந்து, குளறுபடிகள் தெரிய வந்தாலும், அவற்றை புறந்தள்ளி, தனக்கென்று ஒரு நியாயம் கற்பித்து, மனசாட்சியை மொத்தமாக அடகு வைத்தான் மணி.

பல இளம்பெண்களின் வாழ்வையும், குடும்ப தரத்தையும் வளர செய்கிறானே என்ற பெருமிதத்தில், மனம் நிறைந்திருந்த லட்சுமிக்கு சமீபகலாமாக கேள்விப்படும் தகவல்கள் எதுவும் உவப்பானதாக இல்லை.

சில மாதங்களாக, தினம் ஒரு பஞ்சாயத்துடன் யாராவது வீட்டுக்கு வருவது வாடிக்கையாகிவிட, லட்சுமிக்குள் சந்தேக கருமேகங்கள் சூழ்ந்து,எதுவோ சரியில்லை என்பதை உள்மனம் உணர்த்தியது.

மணியிடம் கேட்டால் சாக்கு போக்குகளும், சண்டைகளும் மட்டுமே சரளமாக வந்தன.

அன்று தெருமுனையில் இருந்த காய்கறி கடைக்கு, கிளம்பிய லட்சுமிக்கு, வழக்கமாக “இந்த மாதிரி சமயத்துல எங்கயும் போகாத..நானே வாங்கியாறேன் “ என்று தடுக்கும் கணவன் தடை சொல்லாமல் வழியனுப்பி வைத்ததை கண்டு ஆச்சரியமாகிவிட்டது. சிறுபிள்ளையின் உற்சாகத்துடன், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் மடமடவென்று வெளியேறினாள்.

இருந்தாலும், குழப்பம் சூழ்ந்த மணியின் முகம், அவளுக்குள் இனம்புரியாத கலக்கத்தை கிளப்ப, சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தளை வீதி நாடகம் ஒன்று ஈர்த்தது.

லயித்து பார்த்தவளுக்கு மனதில் கலவர பந்து வேகமெடுத்து உருள, கடைக்கு கூட செல்லாமல் வீடு நோக்கி நடையை திருப்பினாள்..

வீட்டு சுற்றுச்சுவரை நெருங்கும்போதே உள்ளிருந்து வந்த பேச்சு குரல்களில் தெறித்த காரமும் சோகமும, கால்களை நிறுத்திவைக்க, காதுகள் கூரானது.

“இப்படி பண்ணிபுட்டியேயா…நீயெல்லாம் ஒரு மனுசனா? நீ சொன்ன வார்த்தைய நம்பித்தானே பொட்டபுள்ளைய அம்புட்டு தூரம் அனுப்பி வச்சோம். நாங்கதான் தெனந்தெனம் செத்து போழக்கிறோம், அதுகளாவது மூணு வேள சாப்புட்டு, நல்லா இருக்கும்னு நெனச்சா இப்படி கொடும படுத்திருக்கானுவளே பாவிப்பயலுக.” கோபத்துடன் ஒரு ஆண் குரல் ஒலிக்க, அதை தொடர்ந்து ஒரு இளம்பெண்ணின் விசும்பலும் கேட்டது.

“இப்போ என்ன ஆச்சுனு இந்த குதி குதிக்கறீரு? ஒழுங்கா வேலை செய்யலைனா கண்டிக்க தான் செய்வாக..இது ஒரு தப்பா?” மணி எகிறினான.

“என்ன ஆச்சா?! எம்புள்ள கால அடிச்சு ஒடிச்சு.,கைய கொதிக்கிற வெண்ணிகுள்ள முக்கி இம்ச பண்ணிருக்கானுவ,..அது மட்டுமா? வெளியில சொல்லமுடியாத கொடுமையெல்லாம் அனுபவிசிருக்குய்யா எம்புள்ள…எங்கெங்க சூட்டு தழும்பு இருக்கு தெரியுமா? ஆஸ்பத்திரிக்கு கூட கூட்டி போகலியே நாசமா போறவனுங்க…இப்போ கால ஒன்னுஞ்செய்ய முடியாதுன்னு தெரிஞ்சதும் வெரட்டி விட்டுட்டானுங்க…”, பெரியவரின் குரல் தழுதழுக்க, அந்த பெண்ணின் கேவல் இன்னும் அதிகமாக ஒலித்தது.

“இதெல்லாம் எதுக்கு? வேல செய்யாததுக்கா?இருவது மணிநேரம் உழைச்சு ஓடா தேஞ்சு, சாப்பாடு கிடைக்காத ஆதங்கத்துல பசிக்குதுன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக இப்படி செஞ்சிருக்கானுங்க.. டிரைனிங்குனு ஏய்ச்சு பேசுன சம்பளம் கொடுக்கறதில்லை….எங்கள பார்க்க பேச விடறதில்ல, கொத்தடிம மாதிரி நடத்தி இப்போ என் புள்ளைய முடமாக்கிடானுங்களே… ”

“ மில்லுகாரங்கள கேட்டா உம் பொண்ணு நடத்த சரியில்லனு சொல்றாங்க. கேசு போடாம விட்டதே பெரிய விசயம்.” என்றான் மணி அலட்சியமாக.

“பொய்கார பாவிக…எம்பொண்ணு தங்கம்யா….இவனுங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது…””

“அனாவசியம் பேசாத….இதுல இரண்டாயிரம் இருக்கு…எடுத்துட்டு கிளம்பு..”

அதற்கு மேல் மணியிடம் எந்த பேச்சும் எடுபடாமல் போக, சற்று நேரத்தில் கையாலாகாத்தனத்துடன், வெளிவந்த பெரியவரின் கையில் வெள்ளை கவர்.

அவர் பின்னால், ஒட்டிப்போன கன்னங்களும், பஞ்சடைந்த கண்களும், ஜீவனேயில்லாத முகமுமாக, வெந்துபோன வலக்கையுடன், கட்டைகள் உதவியுடன் நொண்டியபடி, வெளிவந்த பெண் பார்த்த பார்வையில் கண்கள் மட்டுமல்ல, இருதயமும் கலங்கியது லட்சுமிக்கு. குற்ற நெஞ்சுடன் கூனி குறுகி போனாள்.

கோபத்துடன் வீட்டில் நுழைந்து சண்டையிட்டவளை சட்டையே செய்யாமல், மீண்டும் ஐந்து சிறுமிகளை அதே பஞ்சாலையில் கொத்தடிமைகளாக மாற்ற கோவைக்கு கிளம்பினான் மணி.

குமுறிக்கொண்டிருந்த லட்சுமியின் மனதில் காதலுக்கும், தர்மத்திற்கும் யுத்தம் நடைபெற,
இறுதியில் வென்ற முடிவு, அவள் வாழ்வின் திருப்புமுனை.

சற்று முன் கண்ட குழந்தை தொழிலாளர் பற்றிய வீதி நாடகம் நினைவிலாட, லட்சுமியின் கைகள் பத்து ஒன்பது எட்டு (1098) என்ற சைல்டுலைன் (childline) இலக்கத்தை தொலைபேசியில் அழுத்தின.

மாலை செய்திகளில் மணி கைதான விஷயம் ஒளிபரப்பானபொது, கேட்பதற்கு லட்சுமி வீட்டில் இல்லை…அவலங்கள் நிறைந்த உலகை சந்திக்க விருப்பமில்லாத அவள் மகவும் கருவிலில்லை.

கணவனும்,கருவறை குழந்தையும் கைநழுவி போனாலும், உழைப்பில் கருகிய இளங்குருத்துகளின் மறுமலர்ச்சி சேவையில் தன்னை இணைத்துக் கொண்ட லட்சுமி,இனி பெறாத பல குழந்தைகளுக்கு அன்னை.


***

 

அன்பு தோழமைகளே,

சிறுகதை முயற்சியில் என் முதல் பகிர்வு இது. உங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்,
சுஜனா