Home / Resources / General Awareness / பள்ளம்துறை ஆன்டனி தாஸ் , கிரிக்கெட் சாதனையாளர்………

பள்ளம்துறை ஆன்டனி தாஸ் , கிரிக்கெட் சாதனையாளர்………

cricket palyer Anthony Das
இந்தியாவின் கடைக்கோடி குமரி முனையிலிருந்து தனது பந்தினை வேகமாக சுழற்றி வீசுகிறார் பள்ளம்துறையை சேர்ந்த ஆண்டனிதாஸ். வெறுமனே பந்தினை மட்டுமல்லாமல் மட்டையாலும் அடித்து விளாசுகிறார் கிரிக்கெட் விளையாட்டில். உலக்கோப்பை கிரிக்கெட்டில் தான் விளையாட வேண்டும் என்ற அதீத கனவுகளோடு கடுமையான வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆண்டனிதாஸ். ஒரு மீனவ கிராமத்திலிருந்து புறப்பட்டுள்ள அந்த இளைஞரை இந்து கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் சந்தித்தேன்.
அப்பா வென்சிலாஸ் அம்மா மரிய பிரவுஸ் இவர்களுக்கு நான் ஆறாவது பிறந்த ஒரே மகன் எனக்கு ஐந்து மூத்த சகோதரிகள். கடைக்குட்டியாக பிறந்ததால் நிறைய செல்லம் கொடுப்பார்கள் வீட்டில் எனக்கு. பள்ளிவிட்டவுடன் எப்பவும் கிரிக்கட் மட்டையையும் பந்தினையும் தூக்கி கொண்டு சக நண்பர்களோடு கடற்கரை மணலில் விளையாட தொடங்கி விடுவோம். எங்களது குழுவில் அதிக ரண் குவிப்பதும் விக்கெட்டுகளை எடுப்பதும் நான் தான். எங்கள் ஊர் பள்ளம்துறைக்காக வெளியூரில் விளையடும் போது அடித்து நொறுக்கிவிட்டேன். சந்தோசம் தாளாமல் விட்டுக்கு வந்தால் கடலுக்கு போன அப்பா கடலில் அடிபட்டு கால்களில் கட்டுகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தார்கள். அன்று முதல் எனது கிரிக்கெட் கனவும் பள்ளி படிப்பும் தகர்ந்து போனது.
குடும்ப பாரம் முழுவது அப்பாவிற்கு பதிலாக தூக்கி சுமக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்தது. இரவு முழுக்க மீன்பிடிக்க கடலில் கட்டுமரத்தில் இருந்து கொண்டு வலை விசுவேன்,பகலில் தூக்கம் கண்களை கட்டும். எனது நண்பர்களோ மணலில் கிரிக்கெட் விளையாடுவார்கள் நான் செய்வதறியாது வேடிக்கை பார்த்து கொண்டுருப்பேன்.
“லேய் மக்கா தாஸ் வா விளையாட” என அழைப்பார்கள்.
விளையாட்டா? குடும்பமா ? கேள்விக்கணைகள் பந்துகளைப்போல விளாசி அடிக்கும் என் மனதில்.எனது கிரிக்கெட் கனவுகளெல்லாம் பொடிப்பொடியாகி சோர்ந்து இருந்த வேளையில் நண்பர்கள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த தீராத மோகத்தினை கண்ட அம்மாவும் எனது சகோதரிகளும் இரவு மீன் பிடிக்க போ என்றும், பகலில் ஓய்வு எடுத்துக் கொண்டு கொஞ்ச நேரம் விளையாடவும் அனுமதித்தார்கள். குடும்ப பாட்டினை எனது சொற்ப வருமானத்தில் தாங்கி கொண்டே அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு அடித்து விளாச ஆரம்பித்தேன். எனது விளையாட்டின் வேகத்தினை பார்த்த நண்பர்கள் மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தினார்கள்.காலம் ஒரு பந்தினைப்போல மிக வேகமாக உருண்டோடியது.
நாகர்கோவில் இந்துகல்லூரியில் இயங்கி வருகிற ”சன்னி கிரிக்கெட் கிளப்பில்” வந்து சேர்ந்தேன். ஊரில் நண்பன் ஒருவன் தனது சூக்களை தந்தான் இன்னொரு நண்பன் தனது கைபந்து அணியின் டிராக் சூட்டினை தந்தான்.முதல் நாள் மைதானத்தில் நான் அடித்து விளையாடியதில் அந்த டிராக்சூட் பேண்ட் கிழிந்து என் மானத்தினை வாங்கி விட்டது. அன்று முதல் நான் விளையாட்டில் காண்பித்த எனது திறமையினை கண்ட கிளப் சக நண்பர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள். கிளப்பின் செயளர் திரு. ஹரிசுப்பிரமணீயன் எனக்கு வழிகாட்டவும் உறுதுணையாகவும் இருந்து விளையாட்டில் ஆலோசனைகள் வழங்கினார்கள். மாவட்ட அணிக்கு பதினாறு வயதுக்கான அணியில் மிக சிறப்பாக விளையாடினேன். அத்தனை பேர்களின் கவனமும் என் மேல் குவிந்தது. மாநில அள்வில் பல்வேறு போட்டிகளில் விளையாடி எனது முத்திரைகளை பதிக்க ஆரம்பித்தேன்.
எனது வாழ்வில் பொருளாதார நிலையினை ஈடு செய்யும் வகையில் எம். ஆர். எஃப் அணியில் என்னை இணைத்துக் கொண்டேன்.அங்குதான் உலக தர விளையாட்டுக்கான அத்தனை பயிற்சியினையும் எனக்கு தந்தார்கள். எனது விளையாட்டு வாழ்க்கையில் திருப்புமுனை தமிழ்நாடு ரஞ்சி டிராபியில் நான் இடம் பெற்றது அதிலும் நாலு ஓவரில் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியும் அணிக்கு பெருமை சேர்த்தேன் கேரள அணியினை வெற்றி கண்டோம்.
இப்போது ஐ. பி. எல்.விளையாட்டில் 20க்கு 20வது கிரிக்கெட் விளையாட்டில் பதில் ஆளாக தேர்வாகியுள்ளேன். எந்த நேரத்திலும் நான் அணிக்காக விளையாட அழைக்கப் படலாம். அடுத்த எனது கனவுகளெல்லாம் உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் விளையாட வேண்டும். அதற்கான பல்வேறு தீவிர பயிற்சிகளை நான் பெறவேண்டும் நிறைய நவீன உபகரணங்கள் தேவையுள்ளது. சகோதரிகள் நான்கு பேர்களை திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டது இன்னும் ஒருவர் உள்ளார். குடும்ப சுமைகளோடு எனது கிரிக்கெட் கனவுகளும் ஈடேரி வருகிறது.
மகிழ்ச்சியான இன்னொரு விசயத்தினையும் நம்போடு பகிர்ந்து கொண்டார் தான் இப்போதும் ஊர்ருக்கு வந்தால் கடலுக்கு போகிறதாகவும், அந்த கடல் தான் எனக்கு இத்தனை வலிமை தருகிறது எனவும், தனது விளையாட்டுக்கான என்ர்ஜியும் அந்த போராட்ட கடல் வாழ்வுதான் தருகிறதாக தனது வெற்றியின் சூட்சமத்தினை முகமலர கூறினார் அப்போது ஆண்டனிதாஸின் கண்களில் துளிர்த்த நீர்துளியில் இந்தியாவின் உலக்கோப்பை மிளிர்வதை காணமுடிந்தது.
அவரது உலக்கோப்பை கனவு மெய்ப்பட மனதார வாழ்த்துவோம்.
அண்டனிதாஸினை நீங்களும் வாழ்த்துங்கள், வழிகாட்டுங்கள் இந்தியாவின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சின்ன ஊரிலிருந்து உலக கிரிக்கெட் அரங்கத்தில் சிக்ஸ்ஸரையும் விக்கெட்டுகளையும் குவிக்கட்டும் அண்டனிதாஸ் ( 9944957464).
நேர்காணல்… ஜவஹர்ஜி.