பெண்மை

பெண்கள் தினத்திற்காக இணையதளம் ஒன்றில் நடத்தப்பட்ட சிறப்பு கவிதைப் போட்டியில் ‘பெண்மை’ என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை, இதோ உங்கள் பார்வைக்கு..

பெண்மை
———
மெல்லிய உடலில் மலையென மன உரமுண்டு
நுண்ணிய உணர்வுகள் நூறாயிரம் கொண்டு
எண்ணியவை முடிக்கும் திறமும் தெரிந்து
அன்புடை நெஞ்சம் ஆழமாய் அமைந்து
வன்மிகு வலியுடன் உயிர் ஈனும் பேறு பெற்று
உலகம் தழைக்க உயரிய நோக்குடன்
உருவம் பெற்ற பெண்மையே!

உடலாய் மட்டும் உனை பார்க்கா
கயமை கலவா ஆண்மையையும்
உலகை உயர்த்தும் அன்பெனும்
மனிதம் பேணும் பெண்மையையும்
உருவாக்கும் கடமையும் உனக்கே..
அன்னையாய்!

கற்றவர் காட்டிய கண்ணிய வழியில்
மற்றவர் போற்றும் மாண்புடன் நடந்து
பெற்றவர் பாரம் பகிர்ந்திடும் பண்புடன்
உற்றவர் தளர்கையில் தாங்கிடும் தன்மையும் உனக்கே
மகளாய்!

மாயையில் சிக்கி, மனம் சிதறாமல்
யதார்த்தத்தில் நிலைத்து, எதையும் எதிர்கொண்டு
அஞ்சாமையும், அறிவுடைமையும், ஆடையாக்கி
மங்கையவள் மதிப்புயர்த்தும் பொறுப்பும் உனக்கே
சகோதரியாய்!

கொண்ட உறவில் அன்புறுதி கொண்டு
குற்றம் களைந்து சுற்றம் பார்த்து
தன்முனைப்பு நீக்கி, தகராத குடும்பத்தை
திறம்பட வழிநடத்திடும் வாய்ப்பும் உனக்கே
மனைவியாய்!

ஏடும், எழுத்தும் ஏற்றமுடன் கற்று
வீடு தாண்டி விண்வெளிக்கும் சென்று
நாடு தாங்கும் நங்கை நல்லாளாக
நலப்பணிகள் நல்கும் உரிமையும் உனக்கே
பெண்ணாய்!

திண்ணிய நெஞ்சுடன்
கண்ணியம் குறையாமல்
தடைகளைத் தகர்த்திடு
விதிகளை வளைத்திடு
மாற்றம் துவங்கட்டும் மனையில்
ஏற்றம் பிறக்கட்டும் உலகில்
வீழ்ந்திடாமல் முயன்று
வெற்றி வானை வசப்படுத்து பெண்மையே!

– சுஜனா

உலகின் அனைத்து மகளிருக்கும் எங்களது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

User Rating: Be the first one !

About admin

Check Also

வரம் தேடி..

போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் …